Monday, February 9, 2009

​வைகாசி தேர் ( பயணம் 10)


வாழ்க்கையோடு ஒன்றி நிகழ்ந்த நினைவுகளை சற்றே சில காலங்கள் கடந்தபின்பு நாம் உள்ளத்திரையில் ஓடவிட்டால் அதில் தென்படும் காட்சிகள் மீண்டும் இதுமாதிரியான வாய்ப்புகள் கிடைக்காதா என்ற ஏக்கம் அடிமனதில் ஏற்படும். நிகழ்வினை அனுபவிக்க சற்று பின்னோக்கி நகர்வோம், சேலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய வியாபார சந்தை, நகரை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும அன்றாடம் ​பொருட்கள் வாங்கவும் விளைந்தவைகளை விற்கவும் வந்துபோகும் மக்கள். இந்த இடத்தின் முழு பெயர் சின்ன மற்றும் பெரிய கடைவீதி, ​தேர்வீதி, இவைகளை உள்ளடக்கிய இன்னும் இரண்டு வீதிகள் ( இன்று வீதி என்றால் ஜூன்ஸ் அணிந்த குழந்தைகள்​கைகொட்டி சிரிக்கும் அவைகளுக்கு​ரோட் என்றால்தான் தெரியும், இன்னொரு உவேசாதான் பிறக்கவேண்டும் ) இப்பகுதிக்கு என்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராஜகணபதி​கோவில், இவரை பார்க்காமல் யாரும் கடையயை திறக்கமாட்டார்கள், ஒரு காலத்தில் தந்தை​பெரியார் இக்கோவில் அருகில்​மேடை போட்டு பகுத்தறிவு போதித்தாக என் தந்தை கூறுவார். இவையன்றி ஆண்டிற்கு ஒருமுறை​தமிழ்மாதமான வைகாசியில் இவ்ஊர் மக்களின் முக்கியநிகழ்வாக கருதப்படும் தேர்திருவிழா, திருவாரூர் தேருக்கு சற்று இணையாக சிவனுக்காகவும், சீனிவாசபெருமாளுக்காகவும் இரண்டு தேர்கள் உண்டு. இத்திருவிழாவின்போது கம்பனின் படைப்பில் வரும் அணில்போல் நானும் என் நண்பர்களுக்கும் வடம்பிடிப்போம். விழாவின் ஒருமாதம் முன்பே அறிவிப்பு வரும், எங்களுக்கெல்லாம் படிப்பைவிட கண்முன் நிற்பது தேர்தான், குறிப்பிட்ட அந்நாளில் உள்ளூர் விடுமுறை விடப்படும், ஜந்து வீதிகளில் வலம் வரும் தேரினை இழுப்பதற்கு நாங்கள் அனைவரும் சென்றுவிடுவோம், அப்பகுதியிலுள்ள வீடுகளின் மொட்டைமாடிகளிலில் இருந்து மக்கள் அனைவரும் எங்கள் மேல் மாம்பழங்களையும் ( மாம்பழத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஊர்) பல்வேறுபழங்களையும் வீசுவர், அவற்றை முண்டியடித்து​கொண்டு எடுப்போம். சிலசமயம்​தேரினை இழுக்கும்போது எதாவது ஒரு பள்ளத்தில் சக்கரம் இறங்கிவிடும், ​தேரை முண்டி தள்ளுவதற்காக ( முண்டி என்ற சொல் கொங்குமாவட்ட ஆரம்பபகுதி வழக்குசொல்) பக்கத்தில் உள்ள சுகவனேசுவரர்​கோவிலில் இருந்து வரவழைக்கபடும் யானைகள் உதவிகரம் நீட்டும். எங்கள் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாள்ர்கள் அதிகம் உண்டு ( இவர்களை பற்றி​சொல்லாவிடில் வரலாறு என்னை மன்னிகாது) தேர்இழுப்பதற்கு இவர்கள முக்கிபங்காற்றுவார்கள். இதுதவிர மிகவும் முக்கியமான ஒரு மக்களை பற்றி நான் இங்கு கூறியாகவேண்டும், அதாவது எங்கள் ஊரில் இருந்து இன்றும் இந்தியா முழுவதும் பல ஊர்களுக்கு சென்று அங்கு உருவாக்கபடும் பல பாதாள சாக்கடைகள் பணிக்காக செல்பவர்கள்,​போயர்கள் என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த இம்மக்களுக்கு யானை பலம் உண்டு​இத்திருவிழாவின ஆணிவேரே இவர்கள்தான், அதாவது இரண்டு பெரிய தூண்களை​போன்ற கட்டைகளை தேரின் பின்சக்கரங்களில் அடியில் வைத்து உந்தி தள்ளுவார்கள் நாங்களும் அதனூடே தேர்வடம் பிடித்து இழுப்போம். இச்சமயத்தில் மட்டும்​தந்தை பெரியாரின் பகுத்தறிவு வண்டு தேர்மேல் உட்கார்ந்திருக்கும் மனிதர்களில் காதில் ரீங்கரமிடும், அதன் விளைவு மேலே குறிப்பிட்ட​இனமக்களை சக மனிதர்களாக ஒரு நான்கு நாட்கள் ஏற்று​கொள்வார்கள், என்ன ஒரு சமநிலை சமதர்ம சமுதாயம்.​இவ்விழாவினை ​சைவ, வைணவத்தை​சேர்ந்தவர்கள் அவரவர் கடவுள்களின் திருவிழாவின்​போது மட்டும் கலந்துகொள்வார்கள் எல்லாம் பழங்காலத்தில் சமயபெரியவர்கள் விதைத்து விட்டுபோன
வித்துக்கள மரங்களாக மாறி இன்றும் தொடர்கிறது. எங்களை
பொருத்தவரையில் இருவிழாகளையும் ஒன்றாகதான் பாவிப்போம். இவ்வாறாக நடைபெற்றுவந்த இவ்விழா காலப்போக்கில் அதன் உண்மையான தோற்றம் மறைந்து குறைவான மக்களை​கொண்டு மஹிந்திரா டிராக்டர்​
வைத்து கொண்டு இழுக்கிறார்கள் என்று கேள்விபட்டதில் இருந்து என் மனம் நிறத்தை பூக்களிடம் தொலைத்த வானவில்லாகிபோனது.

Wednesday, February 4, 2009

மண்ணும் மனிதர்களும் ( பயணம் 9)


இதுவரை என்னுடைய பயணஅனுபவங்களில் பல்வேறு காலகட்ட ஞாபகங்களை அனுபவங்களின் கதை என்ற​பெயரில் எழுதிவந்தேன். இந்த ​பயணத்தில் இருந்து சற்று மாறுதலான தலைப்புகளுடன் என்னுடைய பகிர்தல்​தொடரும்​
இதோ நாம் செல்லவேண்டிய இடம்
வளமும் வனப்பும் கொண்ட ஒரு கிராமம் அது, குழந்தைகள் முதல் ​பெரியவர்கள்வரை கள்ளம் கபடமற்ற மனிதர்கள், பெயர் சிங்காரப்பேட்டை தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தது. அப்பொழுது எனக்கு வயது மூன்று, என்னுடைய மாமா திரு க்ஷோத்திரி அந்த ஊர் பள்ளிகூட வாத்தியார், திருமணமாகதவர் (அந்நாளில்) என்னுடைய தாய்வழி பாட்டியுடன் வசித்து வந்தார், என் அம்மா அப்பா இருவரும் வாத்தியார் வேலை பார்த்துவந்ததால், மாமா வீட்டில் என்னை அந்நாளில் விட்டு​வைத்திருந்தார்கள். இப்பொழுது நிகழ்வுக்கு வருவோம். அந்த ஊரை சுற்றி மிகபெரிய வனப்பகுதி ( இந்நாளில் எல்லேராலும் அறியப்பட்ட சந்தனகாட்டு வீரப்பன் இருந்த இடம்) அப்பகுதியில் உள்ள பொருளாதாரரீதியாக பின்தங்கிய மக்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு அவர்கள் பின்பற்றிய வழிமுறைதான் மிகவும் ஆச்சரியத்திற்கும் பரிதாபத்திற்கும உரிய செய்தி. அதிகாலையில் ஆரம்பித்து இருள்சூழும்நேரம்வரை வனப்பகுதியில் உள்ள முட்புதர்கள், செடிகள் கொடிகள் ஆகியவற்றில் அலைந்துதிரிந்து அங்கு கிடைக்கும் மிளகு, கிராம்பு மற்றும் விலைமதிப்புமிக்க ( இவர்களுக்கு அதன் மதிப்பு​தெரியாது) பொருட்களை சேகரித்து அந்த சிற்றூர் மற்றும் பக்கத்து ஊர்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு கொடுப்பார்கள் அதற்கு அவர்களுக்கு கிடைக்கும் விலை என்ன தெரியுமா? ஒருபடி அரிசி, பழைய துணிமணிகள், அன்றாடம் மீதமுள்ள பழையது ( பழையசோறு) இவற்றை வாங்கும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, ஆனால் கொடுப்பவர்களுக்கோ அளவில்லா இன்பம், அலைசலின்றி விலை மதிப்புடைய பொருட்களை வாங்குகிறோம் என்று. இதுதான் அம்மக்களின் உண்மை வாழ்க்கை, காலப்போக்கில் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி நான் விவரிக்க்​வேண்டியதில்லை, நான் கண்ட நிகழ்வுகள் என் நினைவைவிட்டு அகலாதநிலையில், பின்னாளில் இச்சம்பவங்களை பற்றி என்னுடைய பாட்டியிடம் விவரமாக கேட்டபோது அவர் கூறிய தகவல்கள் இவை,
இன்றைய சூழ்நிலையில் அந்த பகுதியில் நடந்த சம்பவங்களோடு ஒப்பிட்டுபார்க்கும்போது நியூட்டனின் விதியினை மறுக்கதான்​தோன்றுகிறது.

Tuesday, December 16, 2008

அனுபவங்களின் கதை ( பயணம் 8 )


நாம் பயணிக்கும் பாதைகளில் பல சமயங்களில் சில நிகழ்வுகள் என்றும் நம் மனதை விட்டு அகலாதவைகாளக இருக்கும். சில சமயம் மனது கனக்கவும் செய்யும். நான் கூறும் இச்சம்பவம் என் கண்களை விட்டு இன்னும் அகலாமல் உள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கபடும் ஏற்காடு மலைவாசத்தலம் எங்கள் ஊர் அருகில் உள்ளது. எனது கல்லூரி நாட்களில் நான் நாட்டுநலபணி திட்டதிற்காக ​மேலே சொன்ன மலைபகுதிக்கு பத்துநாட்கள் சென்று இருந்தேன் . அங்கு மிகவும் புகழ் மிக்க ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தபட்ட ஒரு பள்ளிகூடம் தான் MONFORT CONVENT OF RESIDENTIAL SCHOOL இந்த பள்ளியில் அந்நாளிலேயே மாணவர்கள் ஆஸ்டலில் தங்கிதான் படிப்பார்கள், அதற்கு ஆகும் கட்டணமும் மிகவும் அதிகம், வசதிவாய்ப்பு உள்ளவர்கள்தான் இங்கு படிக்கமுடியும் நாங்கள் தங்கியிருந்த குடியிருப்பும் இப்பள்ளிக்கு அருகில்தான் இருந்தது, தினமும் நாங்கள் அந்த பள்ளியின் அருகில் நடைபயிற்சி ​மேற்கொள்ளுவோம். அவ்வாறன காலத்தில் ஒரு ஞாயிற்றுகிழமை என்று நினைக்கிறேன், பள்ளியின் வாரவிடுமுறை நாட்களில் மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் ஆசையுடன்​குழந்தைகள் விரும்பிய உணவு மற்றும் உடைகளுடன் அவர்களை காண வந்திருந்தார்கள் அங்க நான் கண்ட காட்சி, சிறிது கூட அந்த குழந்தைகளுக்கு தங்கள் அம்மா அப்பாகளின் மீது பாசமில்லாமல் ஆங்கிலத்தில் hai என்று ​சொல்லிவிட்டு அவர்கள் கொண்டுவந்த​பொருட்களை வாங்கி​கொண்டு ஒரு ஜந்து நிமிடம் கூட நிற்காமல் சென்றுவிட்டார்கள், குழந்தைகளின்
பெற்றோர்களும் வருத்ததுடன் கண்கள் பனிக்க கனத்தஇதயத்துடன் ​வெளியில் காட்டி​கொள்ளாமல்​சென்றனர். இதுதான் இந்த பள்ளியின் உண்மை நிறம், அதுவும் பாசத்திற்கு ​இலக்கணமான நம் தமிழ்நாட்டில், மாணவர்களும் தமிழர்கள்தான். இந்த சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது அதன் விளைவுதான் என் குழந்தையை இம்மாதிரியான பள்ளிகூடங்களில் நான் ஆரம்பத்திலேயே சேர்க்கவில்லை. இன்று உள்ள நிலைமையோ ​வேறு காண்வெண்டில் படிக்காமலேயே வளரும் குழந்தைகள் அப்படிதான் உள்ளார்கள், வாழ்க பணநாயகம்.

Friday, December 12, 2008

அனுபவங்களின்​கதை ( பயணம் 7)


நாம் பயணித்த பாதைகளில் சில முக்கியஇடங்கள் நம் வாழ்க்கை பரிணாமத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய பங்களிப்பினை தரும்.
அந்த பங்களிப்புகள் நமக்கு பல்வேறுவகையில் பயனுள்ளதாகவும் இருக்கும், அவ்வகையில் நான் தவழ்ந்து, விளாயாடி, நடந்து, கண்ணயர்ந்து வந்த எங்கள் நகரத்தின்​மையப்பகுதியில் அமைந்துள்ள ரயில்வண்டி நிலையத்தின் அனுபவங்கள்தான் இவை, இதோ நான் குழந்தை கண்கொண்டு
பார்த்தபோது, அன்றாடம் எனது தந்தை பள்ளி முடிந்துவந்தவுடன், ரயில்நிலையத்தில் ஒரு மேம்பாலம் உண்டு அங்கு என்னை​கூடடி​சென்று இயந்திரபாம்பின் வருகையை காண காத்திருப்பார். என்னை​போலவே என் இல்லத்தின் அருகில் அந்நாளில் என்வயது தோழியான ரமாவும் அவளின் அப்பாமடியில் உட்கர்ந்திருப்பார், இயந்திரபாம்பும் வந்து நிற்க்கும் அந்நேரத்தில் அந்த நிலையத்தில் பல்வேறு மரங்கள் உண்டு, மரத்தில் உள்ள பல்வேறு வகையான பறவைகளும் சத்தமிட்டு​கொண்டு தன் குஞ்களோடு கொஞ்சிமகிழும், நான் அதே புகைவணடி நிலையத்தில் என் சகநண்பர்களோடு சேர்ந்து மரங்களை சுற்றியும், ஓய்வுக்காக நின்று​கொண்டிருக்கும்
புகைவண்டியில் ஒளிந்து​கொண்டும், நிலக்கரிகளை அள்ளி ஒருவர்மீது ஒருவர் போட்டு​கொண்டும் விளாயாடி இருக்கிறோம். எனது கல்லூரி நாட்களில் ரயிலடியில் அமைதியாக நாங்கள் பாடங்களும் படித்தும் இருக்கிறோம், அந்நாட்களில் நாங்கள் உடற்பயிற்சிக்காக நான் பள்ளிக்கு சென்றுவிட்டு சற்று காலற ஓய்வெடுக்கும் சமயத்தில்
மாலை 6 மணிக்கு தினமும் விருத்தாசலம்​செல்லும் புகைவண்டி வரும் அதன் ஒட்டுனர் எங்களது நீண்டகாலநண்பர், அவர் எங்களை புகை வண்டியின் அருகில் அழைத்து​சென்று அதன் நீராவி வரும்பகுதியில்
கால்களை காண்பித்து எங்களுக்கு அந்நாளிலேயே நீராவிமஜாஜ் ​செய்துள்ளார், காதலர்கள் சந்திக்கும் இடமாகவும் இந்தரயிலடி இருந்த்து,
பலர் தாங்கள் காதலிக்கு அளிக்கும் கடிதங்களை பகிரங்கமாக​​மேம்பாலசுவரில் எழுதி வைப்பார்கள், இவ்வாறாக இருந்த ரயிலடி சமீபத்தில நான்​நேரில் பார்த்த​போது முழுஇயந்திரதனமாகமாறி தன்னோடு நிரந்தரமாக இருந்த உறவுகளான மரங்களையும், பறவைகளையும், பூச்செடிகளையும் இழந்து கண்கள்​கைகள் அற்ற ஒரு முடவனாக இருக்கின்ற காட்சியினை கண்டு என்கண்களும் பனித்தது, கலங்கி ஒரு பயனும் இல்லை, இன்று அந்த இடத்தில் முளைத்துள்ளன கணிப்பொறி பதிவுநிலையம், இப்பொழுதும் தன்னை காலத்தோடு மாற்றி​கொண்டு ஆங்கிலம்​பேசும் கான்வெண்ட்குழந்தைகள் மற்றும் ​செல்போன்​காதலர்களின் வருகைகாகவும் காத்து​கொண்டிருக்கிறது அந்த RAILWAY STATION. ரயில்வண்டிநிலையமே, நான் இல்லையென்றாலும் நீ இருப்பாய். இனிய பயணங்களின் வருகைகாக காத்திருங்கள்......

Tuesday, December 9, 2008

அனுபவங்களின் கதை ( பயணம் 6)


நாம்​பொதுவாக இரக்கம் காட்டுவது நம்மோடு கால​வெள்ளத்தில் பயணிக்கும் சக மனிதர்களை மட்டும்தான் அதை தாண்டி மற்ற எந்த உயிர்களுக்கும் நம்மிடம் இரக்க உணர்வு​தோன்றாது, இப்படி நான் நினைத்தது தவறு என்பதினை எங்கள் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்புறபகுதியில் நான் அறிந்தேன், நடந்த நிகழ்வு இதுதான், அதாவது எங்கள் நகரத்தில் இருந்து ஒருமுறை விடுமுறை நாட்களில் நானும் என் உறவுகளும் கிராமத்தில் உள்ள எனது அண்ணன் (கால்நடை மருத்துவர்) திரு.நரசிம்மன் அவர்களோடு நாட்களை இனிமையான இயற்கை சூழலில் இருக்க நினைத்து​சென்றிருந்தோம், அந்த நாட்களில் அவர் தினம்தோறும் காலை மாலை இருவேளைகளிலும் மருத்துவமனனைக்கு வரும் புறநோயளிகளான கால்நடைகளை கவனித்து அவைகளுக்கு மருந்து அளிபபார், ஒரு நாள் மாலை நேரம் 4.30 மணி இருக்கும் ஒரு அழுகை சத்தம் மருத்துவமனை அருகில் இருந்து, அந்த மருத்துவமனை அருகில்தான் எங்கள் அண்ணன் வசிக்கும் இருப்பிடம், நான் மற்றும் என்னுடைய இரு அண்ணன்களுடன் ஓடி சென்று கவனித்தால் ஒரு சிற்றாடு ஒன்றை விவசாயி ஒருவர் பாம்பு கடித்தாக கூறி உடன் மருத்துவ உதவி​செய்ய​கோரினார், அச்சமயம் நானும் எனது சிறிய அணணனும்​சேர்ந்து ஒரு குரலில் இந்த ஆடு மரித்துவிடும் என்று கூறிவிட்டோம், எனது​பெரிய அண்ணன் மிகக்கடுமையாக எங்களை கடிந்து​கொண்டு அந்த சிற்றாடினை பற்றி இவ்வாறு கூறுவது என்பது விவசாயின் குழந்தையை​சொல்வது​போல் என்று அறிவுறுத்தினார், அன்று முதல் என் மனதில் மண்ணில் உள்ள எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கும் எண்ணம்​தோன்றியது, நாங்கள் மன்னிப்பும்​கேட்டோம். எங்களை அந்த ஆடு அன்​போடு பார்த்தது. ஜந்தறிவு உள்ள பிராணிகளுக்கு இருக்கும் நன்றியுணர்வு கூட மனிதர்களுக்கு கிடையாது. பயணங்களும் பசுமையான நிகழவுகளும் ​தோன்றும்......

அனுபவங்களின் கதை ( பயணம் 5)


நான் எப்போதும் கடந்தவந்த பாதைகளில்​ஏற்பட்ட பலவித அனுபவங்களை மீண்டும் ஒருமுறை நினைத்து சிலாகித்து​போவேன், அந்த நிகழ்வுகளின் தன்மை எப்படி இருப்பினும் என் மனதில் உள்வாங்கி அதன் காரணங்களை எண்ணுவேன். அப்படியான ஒரு அனுபவம்தான் இது. அதாவது 1976 ஆண்டு என்று நினைக்கிறேன், எங்கள் ஊரில் மட்டுமல்ல தமிழ்நாடே ஒரு மிக​பெரிய புயலுடன்கூடிய மழையினை சந்திக்க​நேரிட்டது,
எனது பெற்றோரினை பற்றி கூற​வேண்டும் இந்த இடத்தில், அதாவது இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் இருந்தவர்கள். எனது தந்தையார் எங்கள் மாவட்டத்தினை சார்ந்த ஒரு கிராமபுற பள்ளியில பணிபுரிந்தநேரம், நான் என் தாயாரின் பள்ளியில் படித்தவன். அச்சமயத்தில் மேலே குறிப்பிட்டது​போல் நாங்கள் இயற்கையின் கோரதாண்டவத்தை சந்திக்க நேரிட்டது, எங்கள் பகுதியில் ஒரு சிறிய ஆறு ஒன்று உண்டு,
இந்த மழையின் காரணமாக நாங்கள் வசிக்கும் பகுதி முழுவதும் தண்ணீர் புகுந்துவிட்டது, என் அப்பா கிராமபுற பள்ளியிலேயே அந்நாளில் தங்கிவிட்டார், நானும் என் அம்மாவும்தான் எங்கள் வீட்டில் இருக்க​நேரிட்டது, ​மாலை நேரம் ஆக ஆக என் வீட்டிலும் நாங்கள்​மேட்டுபகுதியில் இருந்தாலும் தண்ணீர் புகுந்துவிட்டது, நாங்கள் வீட்டைவிட்டு தப்பிக்க எண்ணி வெளியில் வந்தபோது எதிர்பாரவிதமாக தண்ணீரில் விழுந்துவிட்டேன் எங்கள் பகுதியை​சேரந்த ஒரு​
பெரியவர் என்னை நீரின் ஆழத்தில இருந்து மீட்டார் இல்லையெனில் இந்த அனுபவங்கள் எழுத நான் இருந்திருக்கமாட்டேன். அந்நாளில் எனக்கு கிடைத்த அனுபவம்தான் பிற்காலத்தில் என்னை பாரதியையும், தந்தை பெரியாரையும் திரும்பி பார்த்து அவர்கள் பாதையில் நான் இன்றும் நடந்து செயலாற்றி​கொண்டிருக்கிறேன், நடந்தது இதுதான் அந்த புயல் நாளில் எங்கள் பகுதியில் ஒரு வீடு அவர்கள் பூ வியாபாரம்​செய்பவர்கள் அவர்கள் இல்லம் சற்று உயரமாகவும் ஓரளவிற்கு இடவசதி கொண்டாதாகவும் இருக்கும், அந்த இல்லத்தில் எங்கள் பகுதியை​சேர்ந்த அனைவருக்கும் அந்த இரவு நேரத்தில் உணவு சமைத்து சமபந்தி விருந்து படைத்தார்கள். அந்த இரவு அனுபவம் பிற்காலத்தில் என் வாழ்க்கையில் பாரதிஎழுதிய சாதிகள் இல்லையடி பாப்பா பாடலும், தந்தை பெரியார் காட்டிய சமத்துவபாதையும் நினைத்து இன்றும் பயணித்து​கொண்டு இருக்கிறேன். நீ மட்டும்
நினைத்தால் போதுமா என்று என்னை பாரத்து சிரிக்கின்ற தந்தை மற்றும் தனையனிடமும உள்ள கைதடிகள். பாதைகளும் இனிய அனுபவங்களும் உதிக்கும்......

Monday, December 8, 2008

அனுபவங்களின் கதை (பயணம் 4 )


எனது பயணத்தில் நான் இலக்கியவட்டத்திற்காக நூலகபாதையை​நோக்கி ​சென்றதே ஒரு சுகமும் சோகமும் நிறைந்த ஒரு அனுபவம், ​பொதுவாக நாம் ஒரு தொடரினை எழுதும்போது சிலசமயம் நம் பயணபாதையில் முந்தைய அனுபவத்தின் நிகழ்வுகளை புதிய அனுபவங்க​ளோடு​தொடர்புபடுத்தி ஒப்பிட்டு எழுத​வேண்டிய நிலையும் ஏற்படும், இந்தநான்காம் பாதையும் அப்படிதான். நான் பள்ளிபருவத்தினை தாண்டும் முன்பு, எனக்கு பள்ளி நண்பர்களை விட நான் வசிக்கும் இட நண்பர்கள் நிறையஉண்டு, அந்தவகையில் என் நண்பன் சீனிவாசமூர்த்தி, மற்றும் சிலர், நாங்கள் எல்​லோரும் பள்ளி விடுமுறைகாலங்களில் மிகவும் மகிழ்ச்சியாக சுற்றிதிரிந்த காலங்கள் உண்டு, அப்படிபட்ட காலங்களில், என்னுடைய நண்பனின் அக்கா பத்மா அதிகமாக வாரந்திர கதைநூல்கள் வாங்கி படிப்பார்கள், எங்களை ஒருநாள் கூப்பிட்டு பழைய புத்தககடையில்​சென்று கதைநூல்கள் வாங்கிவர பணித்தார், என் நண்பன் அதற்காக அக்காவிடம்​வைத்த ​கோரிக்கை நாங்கள் வாங்கிதந்தால் எங்களுக்கு சினிமாவுக்கு ​போக காசு தர​வேண்டும் என்பதே, அவரும் தருகிறேன் என்றார், நானும் என் நண்பனுடன் சேர்ந்து புத்தகம் வாங்க பழையநூல்கள் விற்கும் கடைக்கு​சென்றோம், அப்போது என் மனதில் தோன்றியது தான் சிறிய வாடகை நூலகம் அமைக்கும் எண்ணம், நண்பனிடம் என் கருத்தினை முன்​வைத்தேன், பணம் சம்பாதிக்க​வேண்டும என்ற எண்ணமெல்லாம் கிடையாது, நாம் செலவிடும் நேரத்தினை பயனுள்ளதாக​வேண்டும் என்ற ஆவல், அவனும் ஒப்புக்கொள்ள என் இல்லத்தில் எங்களுடைய கனவு நிறைவேறியது, எங்கள் பகுதியில் வசிக்கும் தாய்மார்களுக்கு வீடு​சென்று புத்தகங்களை​கொடுப்போம், இவ்வாறக எங்கள்​பொழுதும் இனிமயாகவும் , எங்கள்​செலவுக்கும் பணம் கிடைத்தது, எங்களுடைய மகிழ்ச்சியில் நடந்தது ஒரு வருத்தமான நிகழ்வு, அதுதான் என் நண்பனின் அம்மாவின் உடனடி மறைவு, ஒரு காலை​நேரத்தில் உடல் நலகுறைபாடு காரணமாக மருத்துவரிடம் ​சென்ற அவருக்கு மாரடைப்பு வந்து இறந்து​போனார், அந்த நிகழ்வு எங்களை மிகவும் பாதித்துவிட்டது, அந்நாள் முதல் நாங்கள் நடத்திவந்த நூலகமும் எங்கள்​சோகத்தோடு​சேர்ந்து முடங்கிவிட்டது, ஆனால் என்னை இந்த நிகழ்வு நூலகபாதையை ​நோக்கி திரும்பபார்க்க ​செய்தது, இவ்வாறக என்னுடைய இலக்கியவட்டம் ஆரம்பித்தது ஒரு ​​சோகநிகழ்வோடு, பயணங்களும் இனிய பாதைகளும் தொடரும்..........................