Monday, February 9, 2009

​வைகாசி தேர் ( பயணம் 10)


வாழ்க்கையோடு ஒன்றி நிகழ்ந்த நினைவுகளை சற்றே சில காலங்கள் கடந்தபின்பு நாம் உள்ளத்திரையில் ஓடவிட்டால் அதில் தென்படும் காட்சிகள் மீண்டும் இதுமாதிரியான வாய்ப்புகள் கிடைக்காதா என்ற ஏக்கம் அடிமனதில் ஏற்படும். நிகழ்வினை அனுபவிக்க சற்று பின்னோக்கி நகர்வோம், சேலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய வியாபார சந்தை, நகரை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும அன்றாடம் ​பொருட்கள் வாங்கவும் விளைந்தவைகளை விற்கவும் வந்துபோகும் மக்கள். இந்த இடத்தின் முழு பெயர் சின்ன மற்றும் பெரிய கடைவீதி, ​தேர்வீதி, இவைகளை உள்ளடக்கிய இன்னும் இரண்டு வீதிகள் ( இன்று வீதி என்றால் ஜூன்ஸ் அணிந்த குழந்தைகள்​கைகொட்டி சிரிக்கும் அவைகளுக்கு​ரோட் என்றால்தான் தெரியும், இன்னொரு உவேசாதான் பிறக்கவேண்டும் ) இப்பகுதிக்கு என்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராஜகணபதி​கோவில், இவரை பார்க்காமல் யாரும் கடையயை திறக்கமாட்டார்கள், ஒரு காலத்தில் தந்தை​பெரியார் இக்கோவில் அருகில்​மேடை போட்டு பகுத்தறிவு போதித்தாக என் தந்தை கூறுவார். இவையன்றி ஆண்டிற்கு ஒருமுறை​தமிழ்மாதமான வைகாசியில் இவ்ஊர் மக்களின் முக்கியநிகழ்வாக கருதப்படும் தேர்திருவிழா, திருவாரூர் தேருக்கு சற்று இணையாக சிவனுக்காகவும், சீனிவாசபெருமாளுக்காகவும் இரண்டு தேர்கள் உண்டு. இத்திருவிழாவின்போது கம்பனின் படைப்பில் வரும் அணில்போல் நானும் என் நண்பர்களுக்கும் வடம்பிடிப்போம். விழாவின் ஒருமாதம் முன்பே அறிவிப்பு வரும், எங்களுக்கெல்லாம் படிப்பைவிட கண்முன் நிற்பது தேர்தான், குறிப்பிட்ட அந்நாளில் உள்ளூர் விடுமுறை விடப்படும், ஜந்து வீதிகளில் வலம் வரும் தேரினை இழுப்பதற்கு நாங்கள் அனைவரும் சென்றுவிடுவோம், அப்பகுதியிலுள்ள வீடுகளின் மொட்டைமாடிகளிலில் இருந்து மக்கள் அனைவரும் எங்கள் மேல் மாம்பழங்களையும் ( மாம்பழத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஊர்) பல்வேறுபழங்களையும் வீசுவர், அவற்றை முண்டியடித்து​கொண்டு எடுப்போம். சிலசமயம்​தேரினை இழுக்கும்போது எதாவது ஒரு பள்ளத்தில் சக்கரம் இறங்கிவிடும், ​தேரை முண்டி தள்ளுவதற்காக ( முண்டி என்ற சொல் கொங்குமாவட்ட ஆரம்பபகுதி வழக்குசொல்) பக்கத்தில் உள்ள சுகவனேசுவரர்​கோவிலில் இருந்து வரவழைக்கபடும் யானைகள் உதவிகரம் நீட்டும். எங்கள் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாள்ர்கள் அதிகம் உண்டு ( இவர்களை பற்றி​சொல்லாவிடில் வரலாறு என்னை மன்னிகாது) தேர்இழுப்பதற்கு இவர்கள முக்கிபங்காற்றுவார்கள். இதுதவிர மிகவும் முக்கியமான ஒரு மக்களை பற்றி நான் இங்கு கூறியாகவேண்டும், அதாவது எங்கள் ஊரில் இருந்து இன்றும் இந்தியா முழுவதும் பல ஊர்களுக்கு சென்று அங்கு உருவாக்கபடும் பல பாதாள சாக்கடைகள் பணிக்காக செல்பவர்கள்,​போயர்கள் என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த இம்மக்களுக்கு யானை பலம் உண்டு​இத்திருவிழாவின ஆணிவேரே இவர்கள்தான், அதாவது இரண்டு பெரிய தூண்களை​போன்ற கட்டைகளை தேரின் பின்சக்கரங்களில் அடியில் வைத்து உந்தி தள்ளுவார்கள் நாங்களும் அதனூடே தேர்வடம் பிடித்து இழுப்போம். இச்சமயத்தில் மட்டும்​தந்தை பெரியாரின் பகுத்தறிவு வண்டு தேர்மேல் உட்கார்ந்திருக்கும் மனிதர்களில் காதில் ரீங்கரமிடும், அதன் விளைவு மேலே குறிப்பிட்ட​இனமக்களை சக மனிதர்களாக ஒரு நான்கு நாட்கள் ஏற்று​கொள்வார்கள், என்ன ஒரு சமநிலை சமதர்ம சமுதாயம்.​இவ்விழாவினை ​சைவ, வைணவத்தை​சேர்ந்தவர்கள் அவரவர் கடவுள்களின் திருவிழாவின்​போது மட்டும் கலந்துகொள்வார்கள் எல்லாம் பழங்காலத்தில் சமயபெரியவர்கள் விதைத்து விட்டுபோன
வித்துக்கள மரங்களாக மாறி இன்றும் தொடர்கிறது. எங்களை
பொருத்தவரையில் இருவிழாகளையும் ஒன்றாகதான் பாவிப்போம். இவ்வாறாக நடைபெற்றுவந்த இவ்விழா காலப்போக்கில் அதன் உண்மையான தோற்றம் மறைந்து குறைவான மக்களை​கொண்டு மஹிந்திரா டிராக்டர்​
வைத்து கொண்டு இழுக்கிறார்கள் என்று கேள்விபட்டதில் இருந்து என் மனம் நிறத்தை பூக்களிடம் தொலைத்த வானவில்லாகிபோனது.

No comments: